Share On
தமிழ்நாடு செய்திகள்

மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைக்க தவெக அரசு திட்டமா? தனி அதிகாரிகளை நியமித்து திமுகவுக்கு ‘செக்’ வைக்க வியூகம்!

Admin 6 days ago

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அவற்றைக் கலைத்து, தனி அதிகாரிகளை நியமிக்க தவெக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது 


இதற்கான அறிவிப்பு, தற்போதைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில் ஆளுங்கட்சியாக தவெக இருந்தாலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அக்கட்சிக்கு கவுன்சிலர்கள் இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவின் ஆதிக்கம் தொடர்வதாக ஆளுங்கட்சி கருதுவதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்திருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளில் திமுக வலுவாக இருப்பது அக்கட்சிக்கு அரசியல் ரீதியாக தொடர்ந்து செயல்பட உதவுவதாக தவெக தரப்பில் பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கம் சட்டப்பேரவையிலும் எதிரொலிப்பதாக கருதும் தவெக, திமுகவுக்கு அரசியல் ரீதியாக ‘செக்’ வைக்கும் நடவடிக்கையாக, உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் மார்ச் மாதம் வரை இருந்தாலும், முதற்கட்டமாக மாநகராட்சிகளை மட்டும் கலைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநகராட்சிகளை கலைத்து தனி அதிகாரிகளை நியமிப்பதன் மூலம், நிர்வாகத்தை தவெக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும், இதனால் திமுகவின் உள்ளாட்சி அரசியல் பலம் மனரீதியாக குறையும் என்றும் ஆளுங்கட்சி தரப்பில் கணக்கிடப்படுவதாக கூறுகின்றனர்.

இதன்பிறகு ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே உள்ளாட்சியிலும் வெற்றி பெறலாம் என்பதும் தவெகவின் அரசியல் வியூகமாக கூறப்படுகிறது.

தவெகவினர் கூறியதாவது:
தவெகவின் அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதே. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகளை முன்வைத்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க கட்சி தயாராகி வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே நகராட்சி துறை டெண்டர் முறைகேடு புகார்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஊழல் புகார்களை அடிப்படையாகக் கொண்டு மாநகராட்சிகள் கலைக்கப்பட்டதாக கூறப்படும் அரசியல் வியூகம், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் தவெகவுக்கு சாதகமாக அமையும் என கட்சி கருதுகிறது.

இந்த விவகாரம் குறித்து தவெக மூத்த அமைச்சர்கள், முதல்வர் விஜயின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைப்பது தொடர்பாக முதல்வரே இறுதி முடிவு எடுப்பார் என்றும் தவெகவினர் கூறுகின்றனர்.

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement