லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மாநகராட்சி அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்து சோதனையைத் தொடங்கினர்.
குறிப்பாக, பொறியியல் பிரிவு அலுவலகத்திற்குள் சென்று முக்கிய நுழைவாயிலை மூடி வைத்து ஆவணங்கள் மற்றும் அலுவலக நடவடிக்கைகள் தொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
சோதனை நடைபெற்று கொண்டிருந்தபோது வெளிப்பணிகள் மற்றும் மதிய உணவுக்காக வெளியே சென்றிருந்த மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், வரி செலுத்தவும் மனுக்கள் அளிக்கவும் வந்த பொதுமக்களும் வெளியே நிறுத்தப்பட்டதால் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
லஞ்சப் புகார்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் தொடர்ந்து ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி வரலாற்றில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அலுவலகத்திற்குள் நுழைந்து இவ்வாறு அதிரடி சோதனை நடத்துவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. சோதனை முடிவில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.